சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. கடந்த 40 நாட்களாக நிலவை நோக்கி பயணித்து வந்த சந்திரயான் விண்கலம் தான் சேர வேண்டிய இடத்தில் வெற்றிகரமாக சேர்ந்தது. அதன்பின், அதிலிருந்த பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள தரையிறங்கியது.
இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய ரோவர் உடனடியாக தனது பணிகளைத் தொடங்காது. ரோவரில் உள்ள கருவிகள் நிலவில் உள்ள சூழலைப் பொறுத்து வெளியே வர ஒருநாள் கூட ஆகலாம். இந்த ரோவர் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மீட்டர் துரத்திற்கு நிலவின் பரப்பில் ஊர்ந்து செல்லும்.
இதன்படி, பிரக்யான் ரோவரின் முக்கியப் பணி நிலவின் மேற்பரப்பை பற்றியும் அதிலுள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்வதுமே ஆகும். அதன்படி, முதல் ஆய்வாக ரோவரில் இருந்து நிலவின் பரப்பில் லேசர் ஒளிக்கற்றை செலுத்தப்பட்டு மணல் மற்றும் பாறைகளில் உள்ள ரசாயன கலவையை ஆய்வு செய்யும்.
மேலும், நிலவின் பாறைகளை மூடியுள்ள ரொகோலித் என்ற மணற்பரப்பை உருக்கி அதிலிருந்து வெளியேறும் வாயுக்களை ரோவர் ஆய்வு செய்ய உள்ளது. இவை அனைத்தும் நாம் அறிய ரோவரில் பொறுத்தப்பட்டுள்ள 3டி கேமரா மூலம், நிலவில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நகர்வும் புகைப்படம் எடுக்கப்படும்.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வகத்தின் மூலம் ரோவரில் இருந்து பெறும் தகவல்களை விக்ரம் லேண்டர் அனுப்பி வைக்கும். மேலும், சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் பிரக்யான் ரோவர், நிலவில் சூரிய ஒளி கிடைக்கும் 14 நாட்களும் ஆய்வு மேற்கொண்டு தனது பணியை நிறைவு செய்யும்.