தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பதில்லை. அதிலும் குறிப்பாக துணிக்கடைகள் என்றாலே அதற்கு டெக்டைல்ஸ் என்ற வார்த்தை கொண்டு தான் பெயர் பலகை வைக்கின்றனர். சமீப காலமாகவே இதுகுறித்து பலரும் புகார் தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழில்தான் பெயர் பலகை வைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்ப்பட்டது.
அதன்படி, டீக்கடைக்கு பதில் தேநீர் கடை என்றும் ஹோட்டலுக்கு பதில் உணவகம் என்றும் பெயரை மாற்றி தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தற்பொழுது வரை பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகம் போன்ற எதற்கும் பெயரை மாற்றவில்லை என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.