தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
பைபோர்ஜாய் புயல் கோவாவில் இருந்து வடமேற்கு திசைக்கு நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
கனமழை:
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பைபோர்ஜாய் புயல் வடக்கு திசைக்கு நகர்ந்து கோவாவில் இருந்து வடமேற்கு திசையில் 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.
இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், திருத்தணி ஆகிய பகுதிகளில் 105. 98 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது. மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.