தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த படிப்புகளிக்கான கலந்தாய்வானது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வினை தமிழக கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்த கலந்தாய்வு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களுக்கும், சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்புக்கான கல்லூரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 60 இடங்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள கோழியின தொழில்நுட்ப கல்லூரியில் 40 இடங்களுக்கும் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. சிறப்புக் கலந்தாய்வு, 7.5 சதவீத கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறும் எனவும் மற்ற அனைத்து இடங்களிலும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தரவரிசைப் பட்டியலை https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணையதளங்களில் சென்று பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.