தமிழகத்தில் சுமார் 30000 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா இன்று (ஜூன் 27) நடைபெற்ற நிலையில், சுமார் 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முதல்வர் அறிவிப்பு:
தமிழகத்தில் சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக சிறப்பான முறையில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டிடும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம், புதிய திட்டமான “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்” கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த திட்டம் மூலம் தொழிற்சாலைக்கான நிலம், கட்டடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் ஒரு சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மதிப்பில் 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் பெற்றிட வழிவகை செய்யப்படுகிறது. மேலும் பேசிய அவர் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம்- கொடூர், திருச்சி மாவட்டம் – மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் – சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தார்.
மேலும் பல திட்டங்களை அவர் அறிமுகம் செய்து இருக்கிறார். அதன் படி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 30000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.