தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 க்கு விற்கப்பட்ட விலையில் வரத்து குறைவின் காரணமாக தக்காளியின் விலை மேலும் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் தக்காளியின் இந்த விலை ஏற்றம் காரணமாக இல்லத்தரசிகள் பலரும் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர். அந்த அளவிற்கு தக்காளியின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையடுத்து, தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ரூ.150க்கு விற்பனையான தக்காளி இன்று யாரும் எதிர்பாராத வகையில் ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.