தங்கம் விலையைபோல் தற்பொழுது தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக தக்காளியின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை பலமடங்கு உயர்ந்ததுக்கு காரணமாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 க்கு விற்பனையானது. தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது என்று மகிழ்ச்சியில் இருந்த இல்லத்தரசிகளுக்கு மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, இன்று ஒரே நாளில் தக்காளி விலை ரூ.30 வரை உயர்ந்து கோயம்பேட்டில் 1 கிலோ தக்காளி ரூ.140 க்கும், சென்னையின் புறநகர் பகுதிகளில் 1 கிலோ ரூ.160 க்கும் விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தையில் 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில் 800 டன் வரத்து குறைந்து 400 டன் தக்காளி மட்டுமே இன்று வந்துள்ளதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.