தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இத்தகைய சிரமத்தை போக்க போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோல் வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து நெரிசலை தடுக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் படிப்பு மற்றும் வேலை போன்ற வெவ்வேறு காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கி வருகின்றனர். இவர்கள் வார இறுதி நாட்களில் தான் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதன் காரணமாகத்தான் வார இறுதி நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வசதியாக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.